மாவட்டத்தில் பல இடங்களில் பெய்தாலும் ஈரோடு மக்களை தொடர்ந்து ஏமாற்றும் மழை

மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் ஈரோடு மக்களை மட்டும் தொடர்ந்து மழை ஏமாற்றி வருகிறது.

Update: 2023-07-25 22:18 GMT

மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் ஈரோடு மக்களை மட்டும் தொடர்ந்து மழை ஏமாற்றி வருகிறது.

மழை

பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கர்நாடகா மழை காரணமாக காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. கேரள மழை காரணமாக பவானியிலும் வெள்ளம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்த மழையின் சாரல் ஈரோடு மாவட்டத்திலும் பிரதிபலித்து, ஆங்காங்கே மழை சாரலாக பெய்கிறது. நேற்று முன்தின நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 1.63 மி.மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக பவானிசாகரில் 5.40 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக சத்தியமங்கலம், எலந்தை குட்டை மேடு பகுதிகளில் 1 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது. பெருந்துறை- 2 மி.மீட்டர், நம்பியூர்-3 மி.மீட்டர், தாளவாடி 1-50 மி.மீ, சென்னிமலை -2 மி.மீ, அம்மாபேட்டை-4.40 மி.மீ, கொடிவேரி-2 மி.மீ, குண்டேரிபள்ளம்- 2.60 மி.மீ, வரட்டுப்பள்ளம்- 2.80 மி.மீ என்று பரவலாக மழை பெய்ததாக பதிவாகி இருக்கிறது. இதுபோல் முந்தைய நாட்களிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை அளவு பதிவாகி வருகிறது.

எதிர்பார்ப்பு

ஈரோட்டில் மட்டும் தினமும் பிற்பகலில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து குளு குளு காற்று வீசும். எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டும் என்று ஈரோடு மக்கள் ஆர்வமாக வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். நீல வானத்தில் திட்டு திட்டாக தவழ்ந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் மறைந்து கருமேகம் சூழும். சூரியன் இந்த மேகக்கூட்டத்துக்குள் மறைந்து கொள்ளும். வீட்டில் இருப்பவர்கள் ஓடி காயவைத்த பொருட்கள், துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்வார்கள். சிறிது நேரத்தில் சுழற்காற்று புழுதிவாரி இறைத்துக்கொண்டு பலமாக வீசும். மழை மேகம் கலையும். வானம் மீண்டும் நீலமாகும்.

ஏமாற்றம்

இப்படியே தினசரி காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நேற்று முன்தினம் ஈரோட்டை சுற்றி உள்ள பகுதிகளில் லேசான சாரல் அடித்தது. ஈரோட்டிலும் சில நிமிடங்கள் தூறல் விழுந்தது. இது வெப்பத்தை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சில நேரம் பன்னீர் தெளித்ததுபோல ஓரிரு துளிகளும் விழுந்தன. நேற்று மாலை வரை வானம் மழை அறிகுறியுடன் மேகங்களை சுமந்து கொண்டிருந்தது. ஆனால் வழக்கம்போல ஏமாற்றியது.

ஈரோடு மக்களும் வானம் எப்போதுதான் துளிகளை மண்ணுக்கு அனுப்பும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் பிறந்தால் முடிந்து விடும் என்று நினைத்தால், ஜூலை மாதம் முடியும் தருவாயிலும் தொடர்கிறது. ஈரோட்டுக்கு இயற்கை கருணை காட்டி மழை பொழிய வைக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்