தஞ்சையில் மரணபாதையாக காட்சி அளிக்கும் மாற்றுச்சாலை

தஞ்சையில் மரணபாதையாக காட்சி அளிக்கும் மாற்றுச்சாலை

Update: 2022-06-23 19:41 GMT

தஞ்சையில் பள்ளம், மேடு நிறைந்ததாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் காட்சி அளிக்கும் மாற்றுச்சாலை தற்போது மரண பாதையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சை மாநகரம்

தஞ்சை மாநகரம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தற்போது தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் சீரமைப்பு, குடிநீர் திட்ட வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை கல்லணைக்கால்வாய் மற்றும் வடவாறு பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிதாக இரட்டை பாலம் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 2 பாலத்திலும் தற்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

பாலத்திற்காக மாற்றுச்சாலை

இதற்காக மாற்றுப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு அதில் போக்குவரத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதனால் தஞ்சை மாநகருக்குள் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்த பகுதியில் வாகனங்கள் கோர்ட்டு சாலை, பெரியகோவில், சோழன்சிலை வழியாக சென்று வருகின்றன. இதர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரகாரம் வெண்ணாறு பாலம் அருகே உள்ள பழைய திருவையாறு சாலை வழியாக வந்து கரந்தை பூக்குளம், ராஜகோரி சுடுகாடு வழியாக வடக்கு வாசல் நான்கு ரோடு வந்து பின்னர் கொடிமரத்து மூலை வழியாக சென்று வருகின்றன.

மரண பாதையாக காட்சி அளிக்கும் அவலம்

இதே போன்று தஞ்சையில் இருந்து மேற்கண்ட வழிதடங்களில் செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. தற்போது வடக்கு வாசல் ராஜகோரி சுடுகாடு வரை சாலை நன்றாக உள்ளது.

அதன் பின்னர் கரந்தை வழியாக வெண்ணாறு பாலம் வரையிலான சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. சாலையில் எங்கு பார்த்தாலும் பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அசைந்தாடியபடியே சென்று வருகின்றன.

வாகன ஓட்டிகள் கடும் அவதி

மெயின் சாலையில் பாலப்பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது மாற்றுச்சாலை கூட மரணப்பாதையாக காட்சி அளிக்கிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழும் அளவுக்கு பள்ளங்கள் காட்சி அளிக்கிறது. பகலிலேயே இந்த நிலை என்றால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வதற்கு அச்சமாக உள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பஸ், வாகனங்களில் செல்லும் போது பள்ளத்தில் ஏறி இறங்குவதால் வாகனங்களில் இருப்பவர்களுக்கு காயமும் ஏற்படுகிறது. சாலை மோசமாக இருப்பதால் வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. எனவே பாலப்பணிகள் முடிவடைந்து முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த சாலையை சீர் செய்து வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்