மேலும் 2 செயற்கை நீரூற்றுகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மேலும் 2 செயற்கை நீரூற்றுகள் செயல்பட தொடங்கின.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி நடைபாதை சீரமைத்தல், புதிய வேலிகள், மின்விளக்குகள் அமைத்தல், ஏரியின் மையப்பகுதியில் 3 செயற்கை நீரூற்றுக்கள், படகில் ஏறுவதற்கான நவீன நடைபாதை, புதிய படகுகள் வாங்குதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு செயற்கை நீரூற்று அமைக்கும் பணி நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செயல்பட தொடங்கியது. மேலும் 2 செயற்ைக நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று முதல் அந்த 2 செயற்கை நீரூற்றுகள் செயல்பட தொடங்கின. இந்த நீரூற்றுகளில் இருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து விழுகின்றன. படகில் சவாரி செய்யும்போது மழைச்சாரல் போல் தண்ணீர் துளிகள் தெறித்து விழுகிறது. இந்த தண்ணீர் துளிகளில் நனைந்தபடி நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நீரூற்றுகளின் அழகை இரவு நேரத்தில் ரசிக்க ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. அந்த பணி விரைவில் முடிவடைந்ததும், இரவு நேரத்தில் செயற்கை நீரூற்றுகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடை விழா தொடங்குவதற்குள் அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.