சினிமா இயக்குனரின் பெண் உதவியாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா இயக்குனரின் பெண் உதவியாளரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-06 20:41 GMT

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா இயக்குனரின் பெண் உதவியாளரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா இயக்குனர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). சினிமா இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வேல்சத்ரியன், அவருடைய பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வேல்சத்ரியன் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை முன்பணமாக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

காவலில் எடுத்து விசாரணை

இதற்கிடையே சினிமா இயக்குனர் வேல்சத்ரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சேலம் கூடுதல் மகளிர் விரைவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். அதன்பேரில் போலீசார் ெஜயஜோதியை ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் தெரிவிக்கலாம்

இதற்கிடையே சினிமா இயக்குனரால் பாதிக்கப்பட்ட பெண்கள், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அவர்களது விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அப்படி புகார் கொடுப்பவர்கள் நேரடியாகவோ அல்லது இன்ஸ்பெக்டரின் 98943 55193 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்