கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.

Update: 2024-10-07 21:16 GMT

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலையில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் கும்பக்கரை அருவிக்கு வந்து உற்சாக குளியல் போட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிக்கு மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனை கண்காணித்த வனத்துறையினர் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும் அருவியில் குளிக்க தடை விதித்தனர். தொடர்ந்து நீர்வரத்தை அவர்கள் கண்காணித்து வந்தனர்.

இருப்பினும் நேற்று காலை வரை அருவியில் குளிப்பதற்கான தடை நீடித்தது. இதற்கிடையே காலை 10 மணிக்கு மேல் அருவிக்கான நீர்வரத்து சீரானது. இதையடுத்து கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்