மயானத்தை சீரமைக்க ரூ.8½ லட்சம் நிதி ஒதுக்கீடு
கோத்தகிரி அருகே மயானம் புதர் சூழ்ந்து காணப்பட்டது. ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மயானத்தை சீரமைக்க ரூ.8½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே மயானம் புதர் சூழ்ந்து காணப்பட்டது. 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மயானத்தை சீரமைக்க ரூ.8½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதர்கள் சூழ்ந்தன
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஜக்கனாரை ஊராட்சி தவிட்டு மேடு, அரவேனு பஜார், காமராஜர் நகர், புதூர், என்.டி.நகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய கிராமங்களில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக, ஊராட்சி சார்பில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரவேனு பஜாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் சமத்துவ மயானம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த மயானம் உரிய பராமரிப்பின்றி, வளாகம் முழுவதும் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படாததால், அந்த வழியாக செல்பவர்கள் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாக்குப்பைகளில் கட்டி கொண்டு வந்து மயான வளாகத்தில் கொட்டி வந்தனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியது.
நிதி ஒதுக்கீடு
இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் புதர் செடிகளால் இறந்தவர்களின் உடல்களை சுமந்து சென்று அடக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஜக்கனாரை ஊராட்சி சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமத்துவ மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும், மயானத்திற்குள் 30 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவருடன் கூடிய கான்கிரீட் நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களின் நலனுக்காக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த , ஊராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.