சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-11-03 18:45 GMT

ஆழியாறு

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பு சுவர் சேதம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு, குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, சோலையார் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் தினமும் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இந்த மலைப்பாதை 42 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையில் மலைப்பாதையில் ஆங்காங்கே தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன.

அங்கு மண்சரிவு ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். ஆனால் தடுப்பு சுவர் சீரமைக்காமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நிதி ஒதுக்கீடு

கடந்த ஆண்டு பருவமழையின் போது சேதமடைந்த அனைத்து தடுப்பு சுவர்களும் சீரமைக்கப்பட்டன. மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையின் போது அட்டக்கட்டி, கவர்க்கல், வால்பாறை, ரொட்டிக்கடை உள்பட 7 இடங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது.

இதன் காரணமாக மண் சரிந்து சாலை சேதமடைவதை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சேதமடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு தடுப்பு சுவர் சீரமைக்கப்படும். எனவே தற்போது மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்