வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு
புயல் மற்றும் தொடர் மழையால் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.;
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி, கல்லூரிகளிலும் மழைநீர் புகுந்தது.
புயல் மற்றும் தொடர் மழையால், இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சூழலில், தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ. 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ. 40 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.