நகராட்சி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.18¼ கோடி ஒதுக்கீடு
ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.18¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.18¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகராட்சி மார்க்கெட்
நீலகிரி மாவட்டத்தில் மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்த காய்கறிகளை சிறு, குறு விவசாயிகள் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர்.
தேங்கும் மழைநீர்
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,500 நிரந்தர கடைகளும், 500 தற்காலிக கடைகளும் உள்ளன. தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது தவிர சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக மார்க்கெட்டில் 15 நுழைவு வாயில்கள் உள்ளன.
ஆனாலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால், பலத்த மழை பெய்யும்போது, மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும் வாகன நிறுத்துமிடம் இல்லாததால், வாடிக்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள். இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 'தினத்தந்தி' நாளிதழிலில் படத்துடன் விரிவாக செய்தி ெவளியிடப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கூறியதாவது:-
நகராட்சி மார்க்கெட்டில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 190 கடைகளை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக 231 கடைகள் கட்டப்பட உள்ளது. இது தவிர 2 பொது கழிப்பிடங்கள், ஏ.டி.எம். மையம், உணவகம், காத்திருப்பு கடை அமைக்கப்பட இருக்கிறது. கடைகளின் மேல் தளத்தில் 137 நான்கு சக்கர வாகனங்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ 18 கோடியே 23 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. உடனடியாக டெண்டர் அறிவித்து பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.