ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சைக்கு ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

குமரி மாவட்டத்தில் ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சைக்கு ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-04-29 21:53 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சைக்கு ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

ரத்தம் உறையா நோய்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இதுவரை ரத்தம் உறையா நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் சிகிச்சை அளிக்கும் முறை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சையை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ரத்தம் உறையா நோயால் 76 பேர் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 50 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 26 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ரத்தம் உறையா நோய் முன் தடுப்பு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1.65 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரத்ததானம்

இதைத் தொடர்ந்து 14 வயதிற்கு உட்பட்ட 13 பேருக்கு ரத்தம் உறையா நோய் தடுப்பூசி போடுவதற்கான சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். அவர்களுக்கு ரத்தம் உறையா நோய் குறித்து பரிசோதனை மேற்கொண்டதையும் அவர் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார். முன்னதாக மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் ரத்த தானம் செய்தனர். அதை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கல்லூரி டீன் பிரின்ஸ் பயாஸ், மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்