சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கம், ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-03 15:42 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து, 2022-ம் ஆண்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்தில் நடத்தியது, உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால், சமீபத்தில், கேலோ இந்தியா-2023 விளையாட்டுப் போட்டிகள், நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் பிரதமர் மோடியினால் தொடங்கி வைக்கப்பட்டன.

அதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு பதக்கப்பட்டியலில் 2-ம் இடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்தது. இவற்றுக்கெல்லாம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அளித்து வரும் ஊக்கமே காரணமாகும்.

2023-2024ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள், ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் பொருட்டு, சென்னையில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உள்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்தும் வகையில், மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடி மதிப்பீட்டிலும்; ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் ரூ.5.71 கோடி மதிப்பீட்டிலும்;

ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் ரூ.2.35 கோடிமதிப்பீட்டிலும்; வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலும்; நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் ரூ.25 கோடி நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்க உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்