இலங்கை அகதிகள் முகாம்களில் 335 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு
குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 335 புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 335 புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா கூறினார்.
அகதிகள் முகாமில் ஆய்வு
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா நேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர், அதிகாரிகளுடன் அகஸ்தீஸ்வரம் தாலுகா கொட்டாரம் அருகே பெருமாள்புரத்தில் உள்ள அகதிகள் முகாமையும், ராஜாக்கமங்கலம் அருகே பழவிளையில் உள்ள அகதிகள் முகாமையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள அகதிகளிடம் தேவைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
வாழ்க்கை மேம்பாடு
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார ரீதியில் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மகளிர் திட்டம் மூலம் சுயஉதவிக்குழு மூலம் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு செயல்படுத்த வேண்டும்.
குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் அதிகமாக நடைபெறுவதால் அகதிகள் முகாம்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கப்பல் பழுது பார்த்தல் தொழில், மரைன் டெக்னாலஜி போன்ற தொழிற்பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
335 புதிய வீடுகள்
கொட்டாரம் பெருமாள்புரம் அகதிகள் முகாமில் 99 புதிய வீடுகளும், ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள பழவிளை அகதிகள் முகாமில் 72 புதிய வீடுகளும், விளவங்கோடு தாலுகா ஞாரான்விளையில் உள்ள அகதிகள் முகாமில் 48 புதிய வீடுகளும், கிள்ளியூர் தாலுகா கோழிவிளையில் உள்ள அகதிகள் முகாமில் 116 வீடுகளும் என மொத்தம் 335 வீடுகள் கட்ட குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிதியில் இருந்து வீடுகளை விரைவாக கட்டி முடிக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாவட்டத்தின் வெளிப்பகுதிகளில் வசிக்க தேவையான இலவச வீடு அல்லது இலவச வீட்டுமனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், இலங்கை அகதிகள் முகாம் தாசில்தார் ரமணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஞாறான்விளை, கோழிவிளை ஆகிய பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களையும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா ஆய்வு செய்தார்.