தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டபயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை சரிவர வழங்கவில்லை. மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வேளாண்துறை, காப்பீட்டு நிறுவனம், வருவாய்த்துறை ஆகியவை கணக்கெடுத்ததில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். தமிழக அரசு 2021-22, 2022-23-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.560 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
கொம்புத்துறை
திருச்செந்தூர் அருகே உள்ள கொம்புத்துறையை சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொடுத்த மனுவில், திருச்செந்தூர் தாலுகா கொம்புத்துறையில் சுமார் 1,500 மக்கள் உள்ளோம். நாங்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறோம். 200 படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாற்று மதத்தை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள் எங்கள் ஊர் கட்டுப்பாட்டை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. தற்போது அந்த முடிவுகளுக்கு விரோதமாக சமூக வலைதளங்களில் அந்த அமைப்பினர் தகவல்களை பரப்பிவருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் வாழ்வியல், பழக்க வழக்கங்களில் தலையிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த சுகாதார நிலைய கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் சிகிச்சை செய்வதற்கு வசதியாக முழுநேர ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடியில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஏசாதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறி உள்ளார்.