தேவர்சோலை அருகே பேய் நடமாட்டம் இருப்பதாக கூறிகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆதிவாசியினர் மறுப்பு-மூட நம்பிக்கையை கைவிட வேண்டும் என போலீசார் அறிவுரை

தேவர்சோலை அருகே பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆதிவாசி மக்கள் மறுத்துவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று மூடநம்பிக்கை கைவிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அறிவுரை வழங்கினார்கள்.

Update: 2023-06-05 19:00 GMT

கூடலூர்

தேவர்சோலை அருகே பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆதிவாசி மக்கள் மறுத்துவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று மூடநம்பிக்கை கைவிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அறிவுரை வழங்கினார்கள்.

பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

கூடலூர் தாலுகா தேவர்சோலை மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனால் அந்தந்த பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதேபோல் தேவர்சோலை அருகே கடசனக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப ஆசிரியர்களிடம் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள் விளக்கம் கேட்டபோது அப்பகுதியில் பேய் நடமாடுவதாகவும், பள்ளிக்கூடத்துக்கு சென்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

பேய் நடமாட்டம்

இதுகுறித்து தேவர் சோலை அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் போலீசாரின் உதவியை நாடியது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கபில்தேவ், தேவர்சோலை தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட போலீசார் மற்றும் தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் கடசனக்கொல்லி கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அப்பகுதி மக்களை சந்தித்தனர்.

அப்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொம்மன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் ஆன்மா அப்பகுதியில் சுற்றி வருவதாகவும், இதனால் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் இறந்தவரின் ஆன்மாவால் குழந்தைகளுக்கு பிரச்சினை ஏற்படும் என ஆதிவாசி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

போலீசார் அறிவுரை

இதைக்கேட்ட போலீசார், பேய் நடமாட்டம் என்பது மூடநம்பிக்கையாகும். அதுபோல் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே குழந்தைகளின் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டாம். தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். அப்போது பள்ளிக்கூடத்தில் மதிய நேரத்தில் குழந்தைகள் ஓய்வு எடுக்க பாய்கள் இல்லை என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாய்களை போலீசார் வழங்கினர். தொடர்ந்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் பின்னரே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதாக ஆதிவாசி மக்கள் உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்