தரமற்ற சாலை அமைப்பதாக கூறி பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம்
கோவில்பட்டியில் தரமற்ற சாலை அமைப்பதாக கூறி பா.ஜ.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து நேற்று பா.ஜ.க.வினர் திடீரென்று பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி பொறியாளர் சணல் குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினா். தற்போது, முதல்கட்ட பணி தான் நடக்கிறது என்றும், தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக் கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.