இரட்டை தம்ளர் முறை உள்ளதாகவும் குற்றச்சாட்டு:ஓட்டல், டீக்கடைகளில் தீண்டாமையா?- கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஓட்டல், டீக்கடைகளில் தீண்டாமை உள்ளதாகவும், இரட்டை தம்ளர் முறை இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் கலெக்டர், போலீ்ஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஓட்டல், டீக்கடைகளில் தீண்டாமை உள்ளதாகவும், இரட்டை தம்ளர் முறை இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் கலெக்டர், போலீ்ஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில்களில் அனுமதி மறுப்பு
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஆவியூர் தெற்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான செல்லாயி அம்மன் கோவில், ஈசுவரன் கோவில் மற்றும் அய்யனார் கோவில்கள் உள்ளன. ஆனால் இந்த கோவில்களுக்குள் செல்வதற்கும், திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பட்டியல் இன மக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இரட்டை தம்ளர் முறை
மேலும் அங்குள்ள டீக்கடைகளில் இரட்டை தம்ளர் முறை பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் பட்டியல் இன மக்கள் ஓட்டலில் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
முடி திருத்தம் செய்வதற்கும் அனுமதிக்காமல் தீண்டாமை செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். அந்த பகுதியில் தீண்டாமையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க வேண்டும்
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.