'தெருவிளக்குகள் எரியாததால் வார்டுக்கு செல்ல முடியவில்லை'; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

‘தெருவிளக்குகள் எரியாததால் வார்டுக்கு செல்ல முடியவில்லை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் குற்றம் சாட்டினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-06-26 21:00 GMT

'தெருவிளக்குகள் எரியாததால் வார்டுக்கு செல்ல முடியவில்லை' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் குற்றம் சாட்டினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியின் சிறப்பு கூட்டம், கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ஜான்பீட்டர் (தி.மு.க.):- ரெயில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் திண்டுக்கல்லில் இறந்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

(இதையடுத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது)

விஜயா (தி.மு.க.):- தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஜான்பீட்டர் (தி.மு.க.):- மாநகராட்சியில் மனைப்பிரிவுகளில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கி வேலியிட்டு வழங்கப்படுகிறதா?

நாராயணன் (பொறியாளர்):- பூங்காவுக்கு இடம் ஒதுக்கி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.5 கோடி வரி பாக்கி

தனபாலன் (பா.ஜ.க.):- திண்டுக்கல்லில் முன்பு ஆணையராக இருந்தவர் ரூ.5 கோடி வரி பாக்கி வைத்துள்ளார். அதன் மீதான தணிக்கைக்கு எந்த வகையில் பதில் அனுப்பப்பட உள்ளது.

ஆணையர்:- வரி நிலுவை பின்னர் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனவே தணிக்கை தடை பத்திகளை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும்.

கணேசன் (மா.கம்யூ):- பழைய ஆணையரால் மாநகராட்சிக்கு ரூ.5 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு அதிகாரியும் தவறு செய்தால் நிதிநிலை என்னவாகும். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ஆணையர்:- அந்த காலக்கட்டத்தில் வரி வசூல் நிலுவையில் இருந்தாலும் பின்னர் வசூலிக்கப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு-விவாதம்

தனபாலன் (பா.ஜ.க.):- ஒடுக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டு விட்டதா?

ஆணையர்:- நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஆர்.டி.ஒ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்பட உள்ளது.

ஜான்பீட்டர் (தி.மு.க.):- மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைதி பேச்சுவார்த்தை எதற்கு?

துணைமேயர்:- பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனபாலன் (பா.ஜ.க.):- ஆர்த்தி தியேட்டர் சாலையில் பள்ளி மாணவர்கள் ஒதுங்கி நிற்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.

ஆணையர்:- மாநகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

ஜோதிபாசு (மா.கம்யூ):- ஒடுக்கம் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று முறையான ஆவணங்களை காண்பித்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறிவிட்டனர். அதேநேரம் பல்வேறு இடங்களில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. அவ்வாறு கோவில்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களையும் மீட்க வேண்டும். தெருவிளக்குகள் எரியாததால், வார்டு பகுதிக்குள் செல்ல முடியவில்லை. (சில வார்த்தைகளை கூறினார்) (இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

கண்டிப்பு

துணைமேயர்:- மாநகராட்சி நிர்வாகத்தை அசிங்கப்படுத்தும் வகையில் பேசக்கூடாது. உங்கள் வார்டில் மட்டும் ரூ.3½ கோடிக்கு பணிகள் நடக்கின்றன. முத்துச்சாமி குளம், லெப்பை குளம் ஆகியவற்றை சீரமைத்தல், ஒத்தக்கண் பாலத்தில் கழிவுநீர் தேங்காமல் செல்ல கால்வாய் என பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சபையில் கண்ணியத்தோடு பேச வேண்டும்.

ஜானகிராமன் (தி.மு.க.):- கூட்டணி கட்சி வார்டுகளுக்கு அதிக நிதியை ஒதுக்கி பணிகள் நடக்கின்றன. எனவே அதை மனதில் வைத்து பேச வேண்டும்.

செந்தில்குமார் (தி.மு.க.):- அவருடைய வார்டுக்கு அதிக நிதியை ஒதுக்கியும் அவ்வாறு பேசுகிறார்.

ஜோதிபாசு (மா.கம்யூ):- மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு பணிகளை செய்வதற்கு தான் பேசுகிறேன்.

தனபாலன் (பா.ஜ.க.):- கோவில்களை இடிக்க சொல்வது தான் உங்கள் கொள்கையா?

(இதையடுத்து மேயர், துணை மேயர் ஆகியோர் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினர்)

வித்யா (தி.மு.க.):- நாகல்நகர் மேம்பாலம் அருகே காலை நேரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சாலையோரத்தில் குவிகின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:- போக்குவரத்து போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

லட்சுமி (தி.மு.க.):- நாகல்நகரில் மாடுகள், தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்:- சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வாகனம் தயாராகி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

மின்வெட்டும், கலகலப்பும்

மத்திய அரசு காலை மற்றும் மாலையில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஜான்பீட்டர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, மின்சாரம் வரும் வரை காத்திருக்காமல் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதையடுத்து மேலும் ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்