அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்
அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன்கூறினார்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக இருந்த அமர்குஷ்வாஹா சமூக பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடைக்கோடி மக்களுக்கும்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மாவட்ட நிர்வாகத்தினுடைய தலையாக கடமையாக இருக்கும். சட்டம் ஒழுங்கு மற்றும் விழிம்புநிலை மக்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுடைய முன்னேற்றம் அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். இதை நோக்கி மாவட்ட நிர்வாகத்தினுடைய பயணம் தொடரும்.
பழங்குடியின மக்களுடைய அடிப்படை வசதிகள் முதலில் நிறைவு செய்யப்படும். அவர்களுடைய வேலைவாய்ப்பு வசதிகளும் உறுதி செய்யப்படும். எந்தெந்த இடங்களில் தொழிற்பேட்டை அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
எப்போதும் திறந்திருக்கும்
எப்பொழுது வேண்டுமென்றாலும் பொதுமக்கள் என்னை சந்திக்கலாம். தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம். பொது மக்களுக்காக எப்போதும் எனது அறையின் கதவு திறந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர பாண்டியன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். பி.எஸ்சி, எம்.ஏ. முடித்துள்ள இவர் 2005- ஆம் ஆண்டு திருச்சியில் பயிற்சி துணை கலெக்டராகவும், 2006-ல் ஆத்தூர் வருவாய் கோட்டாச்சியராகவும், 2008-ல் தருமபுரி மாவட்ட வழங்கல் அலுவலராகவும், 2009 மார்ச் மாதம் முதல் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பொதுமேலாளராகவும், 2011 நவம்பர் முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குநர், 2012-ல் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், முன்னாள் படை வீரர் நலக்கழக பொதுமேலாளர், 2013 டிசம்பர் முதல் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்று, 2018 முதல் 2020 வரை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலராகவும். 2020 முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகவும், 2021 ஜூன் முதல் மாநில திட்டக்குழு செயல் உறுப்பினராகவும், 2021 செப்டம்பர் முதல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராகவும் இருந்தார்.