மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் ெசய்து கொடுக்க வேண்டும்
கோடை விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.;
கோடை விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜமுனாமரத்தூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் ஜமுனாமரத்தூரில் உள்ள தனியார் பள்ளி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஜவ்வாதுமலையில் இதற்கு முன்பு நடைபெற்ற கோடை விழாவை விட இந்த கோடை விழா பெரிய அளவில் பிரமாண்டமான முறையில் நடைபெற வேண்டும்.
அதற்காக அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். விழாவில் துறை ரீதியாக பல நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்
கோடை விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க வேண்டும்.
ஜவ்வாதுமலைக்கு வரும் வழிகள் அனைத்தும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் அமைக்க வேண்டும். போக்குவரத்து வசதியில் எந்த ஒரு குறைபாடும் இருக்காமல் அனைத்தும் நல்ல முறையில் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சுமார் 460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு அடிப்படை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பாதுகாப்பாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.
5 ஆயிரம் பயனாளிகள்
விழாவில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் பல கட்டிட திறப்பு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. துறை ரீதியாக அனைத்துத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட துறை மூலம் ஸ்டால் அமைத்து கண்காட்சி அமைக்க வேண்டும்.
பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் மதிய உணவு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் கோடை விழா நடைபெறும் அரங்கத்தினையும், சுற்றுலா மாளிகையும் ஆய்வு செய்தார்.
அப்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, உதவி கலெக்டர்கள் மந்தாங்கனி, தனலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர்கள் ஜீவாமூர்த்தி, சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், ரேணுகோபால் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.