உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.

Update: 2022-11-09 18:45 GMT

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, 75 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றபட்டன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலானாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக சம்பவம் நடந்த இடம் உயிரிழந்தவரின் வீடு உள்பட பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும் இந்த வழக்கில் கைதான 6 பேரையும் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 7-ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 6 பேரையும் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி சென்னை அழைத்துச்சென்றனர்.

கோவை அழைத்து வந்தனர்

அவர்கள் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்களை தற்காலிகமாக புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள், புழல் சிறையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கோர்ட்டில் மனு

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டதும், அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். எனவேதான் இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த 6 பேரையும் சென்னை அழைத்துச்சென்றனர்.

தற்போது கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டதால், மீண்டும் கோவை அழைத்து வரப்படுகிறார்கள். மேலும் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இதற்காக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்