அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ளாட்சித்துறைகள் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-10 17:19 GMT

விழுப்புரம்:

2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப்பணிகள் குறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மைப்பணி

தமிழக அரசின் உத்தரவின்படி வரும் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி நாளை  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை திறந்து 'நம் குப்பை நம் பொறுப்பு' என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளின் வளாகத்தில் உள்ள குப்பைகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருத்தல், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தேக்க தொட்டி மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள கிராம தூய்மைப்பணியாளர்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அரசு அறிவுரையின்படி நடப்பு கல்வியாண்டில் அதிகளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களால் பள்ளிகள் பார்வையிடப்பட உள்ளதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் வருகைபுரிந்து உரிய பணியாளர்களை கொண்டு தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை தூய்மையாக வைப்பதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைத்து பள்ளிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்