அனைத்து குளங்களிலும் மதகுகளை சீரமைக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் மதகுகளை சீரமைக்க வேண்டும், என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் மதகுகளை சீரமைக்க வேண்டும், என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் அசோக்குமார் பேசுகையில், ''நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் 37.82 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 252 ஹெக்டேரில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மாவட்ட முழுவதும் சிறப்பு பறக்கும் படை அமைத்து உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தல், தரமற்ற உரங்களை விற்பனை செய்தல் ஆகிய புகாரின் அடிப்படையில், 7 உர விற்பனை நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களிலும் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த 36 விற்பனை நிலையங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
மதகுகளை சீரமைக்க...
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் மதகுகளை சீரமைக்க வேண்டும். பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். எலுமிச்சை ஆறு அணைத்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காரையாறு வனபகுதிக்கு விவசாயிகள் செல்வதற்கு தடை விதிக்க கூடாது. பாளையங்கால்வாயை உடனே தூர் வார வேண்டும். மேலப்பாளையம் உழவர் சந்தை அருகே கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களுடைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நெல்லை கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். கால்வாயில் தூர்வாரும் பணிகள் 30 சதவீதம் தான் நடந்துள்ளது. பணிகள் முழுமையாக நடக்க உதவி செய்ய வேண்டும். பாசன நிலத்தில் உள்ள விளைநிலங்களை பட்டா போட்டு வீடு கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில் தேவையின்றி கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. புதிதாக தடுப்பணை கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் சிறியகுளத்தில் அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குகின்றன. இதனால் அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும், என்றார்.