10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல்; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அ.தி.மு.க., பா.ஜ.க. புறக்கணிப்பு
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 2 கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்து உள்ளன. இதேபோல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சியும் கலந்துகொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது சார்பிலும் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை.
சென்னை, நவ.13-
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது சரியானதுதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், இது சமூகநீதிக்கு எதிரானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிந்தது.
இதன்படி சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ரகுபதி மற்றும் வில்சன் எம்.பி, காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா, பா.ம.க. சார்பில் வெங்கடேஷ்வரன், வக்கீல் பாலு, ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ.,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி, சின்னதுரை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சின்ராஜ் எம்.பி. மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானம்
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களும், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து பேசினர். அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப்பிரிவினையை கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும் நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.
மறுசீராய்வு மனு
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாக பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையை போக்கும், பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதி தத்துவத்தின் உண்மை விழுமியங்களை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.
சமூகநீதி தத்துவத்தை காக்க தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் ஆதரவு
கூட்டம் முடிவடைந்ததும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டத்தில் கலந்து கொண்ட 10 கட்சிகளும் சமூகநீதிக்கு எதிரான ஒருமித்த கருத்துகளை கொண்டு உள்ளன. பொருளாதார அடிப்படை என்று சொல்லி கொண்டு இருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக நாம் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள்.
அனைத்து கட்சிகளும் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கு 10 கட்சிகளும் ஒப்புக்கொண்டு உள்ளன. தமிழக அரசும் உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுக்கும்.
தி.மு.க., அ.தி.மு.க. ஒருமித்த கருத்து
சமூகநீதி கொள்கையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு ஒருமித்த கருத்து இருந்துள்ளது. குறிப்பாக இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முதன் முதலில் சட்டம் போட்டவர் கருணாநிதி. அவரை பின்பற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால் அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. சமூகநீதி கொள்கையில் தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஒரே கருத்துடன்தான் இருந்து இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் கூட இந்த சட்ட மசோதா கொண்டு வந்தபோது, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எதிர்த்து பேசி வெளிநடப்பு செய்தார். மாநிலங்களவையில் நவநீத கிருஷ்ணன் வெளிநடப்பு செய்துள்ளார்.
அ.தி.மு.க. பங்கேற்காதது வருத்தம்
அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளாதது வருத்தம் அளித்தாலும், இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மறுசீராய்வு மனுக்களை போடுவார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் பேர் சமூகநீதி கொள்கையில்தான் வருகிறார்கள். 10 சதவீதம் பேருக்காக அ.தி.மு.க செல்கிறது. பா.ஜ.க. ஆதரவாக செல்வதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நிறைவேற்றி உள்ளார்.
இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட மாட்டாது
தமிழக அரசு சட்டரீதியாக மறுசீராய்வு மனு போட வாய்ப்பு இல்லை. எனவே கட்சிகள் சார்பில் போடப்படுகிறது. அதற்கான வாய்ப்பு வரும்போது, தமிழக அரசு உறுதுணையாக இருந்து குரல் கொடுக்கும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படமாட்டாது என்று முதல்-அமைச்சரும் தெளிவாக கூறிவிட்டார். 69 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.