ஊத்தங்கரை:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு விரிவாக்க பணியை உடனே தொடங்கக்கோரி ஊத்தங்கரை சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் நான்குமுனை சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீவிர சிகிச்சை பிரிவு விரிவாக்க பணிக்கு ரூ.23.75 கோடி பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கியும், இடம் தயாராக இருந்தும் பணிகளை தொடங்காமல் உள்ள அரசு அதிகாரிகளை கண்டித்தும், பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் நேற்று ஊத்தங்கரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காட்டேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி, பூபதி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமார், பூபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அசோகன், குபேந்திரன்,
இந்திய குடியரசு கட்சி சார்பில் பேரூராட்சி கவுன்சிலர் சிவன், அ.தி.மு.க. சார்பில் மணி, ஜாபர், காங்கிரஸ் சார்பில் டாக்டர் நடேசன், நாகராஜ், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் டாக்டர் இளையராஜா, ஆடிட்டர் லோகநாதன் சேகர், அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ராஜா, திராவிடர் கழகம் சார்பில் பிரபு, சிவராஜ் மற்றும் ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.