சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-26 17:22 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது

அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள், நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான டெண்டர் நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணையின் போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துக்களுக்கும் அறிவுறுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அகற்றப்பட்ட சீமைக் கருவேல மரங்களை ஏலம் மூலம் விற்க பஞ்சாயத்துக்களுக்கு அனுமதி வழங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்