தேனி மாவட்டம் முழுவதும்கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
தேனி மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்செயல் விடுப்பு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமையில் தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு 50-க்கும் மேற்பட்ட சங்கங்களின் சாவிகளை ஒப்படைக்கப் போவதாக கூறினர். அவர்களிடம் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் சாவியை ஒப்படைக்காமல் திரும்பிச் சென்றனர்.
போராட்டம் தொடரும்
இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் கூறும்போது, 'தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு நிதி நெருக்கடியில் உள்ளது. தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான தொகையை அரசு இன்னும் முழுமையாக திருப்பிக் கொடுக்கவில்லை. 'பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இது பல இடங்களில் லாபகரமாக இல்லை.
சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுவதால் இதை கைவிட வேண்டும் என்றும், மாநில அளவில் இதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எந்திரங்களை ஒப்படைப்பு செய்ய திட்டமிட்டோம். தற்போது தொடர் விடுப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை விடுப்பு போராட்டம் தொடரும்' என்றார்.
இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன.