கோவை: அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப்போட்டி
கோவையில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் ஆண்கள் பிரிவில் இந்திய கடற்படை அணியும் கோப்பையை கைப்பற்றியது.
கோவை:
கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 55-வது ஆண்டு ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, சி.ஆர்.ஐ. கோப்பைக்கான 19-வது ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
அதில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியும், தென்மேற்கு ரெயில்வே அணியும் மோதின. இந்த போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணி 64-39 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தொடர்ந்து ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய கடற்படை அணியும், இந்தியன் ரெயில்வே அணியும் விளையாடின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடற்படை அணி அணி 83-70 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அணிக்கு ரூ.1 லட்சமும், கோப்பையும் வழங்கப்பட்டது.