வெளிப்பாளையம்:
நாகையில் தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் செயல் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி நிதிநிலை அறிக்கையை வாசித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் முருகேசன், நாகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். சுகாதாரத்துறையில் இந்தியா அளவில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு பாராட்டு தெரிவித்து கொள்வது. பொது சுகாதாரத் துறையில் தொழுநோய் ஆய்வாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்த மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் 420 பணியிடங்களை பயிற்சி பெற்ற சுகாதார ஆய்வாளர்களுக்கும் வழங்கியதற்கு பொது சுகாதாரத்துறைக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வது, புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சுகாதார ஆய்வாளர் நிலை I பணியிடங்களை உருவாக்க வேண்டும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் இருப்பதை போல் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை II பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்களுக்கும், மக்களை தேடி மருத்துவத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நாகை மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார்.