முருகன், சாந்தன் உள்பட 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன-திருச்சி கலெக்டர் பேட்டி

முருகன், சாந்தன் உள்பட 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-11-14 19:39 GMT

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சில அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உண்ணாவிரதம் இருக்க போவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் நேற்று காலை சிறப்பு முகாமிற்கு சென்று 4 பேரையும் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து முகாமில் இருந்து வெளியே வந்த கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் நடைபயிற்சிக்கான இடவசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு முகாமில் அவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. வெளிநாட்டவர் தவறு செய்து விட்டு வழக்கில் இருந்து ஜாமீன் பெற்றாலோ, விடுதலையானாலோ, அவர்களுக்கு இங்கு வீடு இல்லாததால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

பின்னர் இங்கிருந்து எந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்களோ, அங்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்படும். முகாமிற்குள் உள்ளவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய உறவினர்கள், ரத்த சொந்தங்கள் வந்து பார்க்கலாம். மற்றபடி, முகாமிற்குள் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்து கொள்ள அனுமதி கிடையாது.

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படும் வெளிநாட்டவர் குறித்து முதலில் அவர்களுடைய நாட்டிற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். அந்த நபர், தங்கள் நாட்டின் குடிமகன் தான் என்பதை உறுதி செய்து அங்கிருந்து நமக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன்பிறகு அந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகுதான், அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புவதற்கான பணிகளை செய்ய முடியும்.

தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்