அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும்
ஆட்டோ டிரைவர்கள் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டோ நிறுத்த சங்க தலைவர்கள், பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஆட்டோ உரிமையாளரின் முகவரி, டிரைவர் முகவரி, ஓட்டுனர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும். மேலும் அவற்றை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் காண்பித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆட்டோவிற்கு தனித்தனியாக ஒற்றை இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கப்படும். அவற்றை கண்டிப்பாக ஆட்டோவின் பின்புறத்தில் ஒட்ட வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அந்த எண்ணை தெரிவித்தால் உடனடியாக அந்த ஆட்டோவின் விவரங்கள் அனைத்தும் போலீசாருக்கு தெரிய வரும். அதன் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.