அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2023-06-26 22:32 IST

சென்னை,

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நலிவடைந்து வரும் போக்குவரத்துக் கழகங்களுக்கு புத்துயிருட்டுவதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கவலையளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு புதிய ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஒரே நேரத்தில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் மிகவும் வலிமையான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் அதன் செயல்திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இயங்க வேண்டுமானால் காலாவதியாகும் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும்; ஓய்வு பெறும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாற்றாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக புதிய ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பணியமர்த்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, 7 ஆண்டுகளில் வாழ்நாள் காலம் முடிவடைய வேண்டிய பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்குகின்றன.

2015-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்பட ஒரு லட்சத்து 44,818 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களில் 28,559 பேர் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஓய்வு பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 700 பேர் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற்றவர்களையும் கணக்கில் கொண்டால், மொத்த காலியிடங்கள் 30 ஆயிரத்தைத் தாண்டும். 2015-ஆம் ஆண்டு பணியாளர் எண்ணிக்கையில் இது 21 விழுக்காடு ஆகும். கடந்த பத்தாண்டுகளில் புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், 21 விழுக்காடு பணியாளர்கள் இல்லாவிட்டால், அதே அளவுக்கு செயல்திறன் பாதிக்கப்படுவது உறுதி.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறன் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை, போக்குவரத்துத் துறையின் கொள்கைவிளக்கக் குறிப்பில் உள்ள புள்ளிவிவரங்களே உறுதி செய்கின்றன.

* 2014-15ஆம் ஆண்டின் நிறைவில் அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை 22,809 ஆகும். 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 20127 ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 11.76% ஆகும்.

* 2014-15 ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 20,684. 2023 பிப்ரவரி மாத நிலவரப்படி இயக்கப்படும் பேருந்துகளின் 18,723. 9 ஆண்டுகளில் வீழ்ச்சி 9.48%.

* 2014-15ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு இயக்கப்பட்ட மொத்த தொலைவு 91.90 லட்சம் கி.மீ ஆகும். 2023 பிப்ரவரியில் இது 77.71 லட்சம் கி.மீ ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 15.59% ஆகும்.

* 9 ஆண்டுகளுக்கு முன் 1.82 லட்சம் கி.மீ ஓடிய பின் மாற்றப்பட்ட உருளிப்பட்டைகள் (டயர்) இப்போது 3.03 லட்சம் கி.மீக்கு ஒருமுறை தான் மாற்றப்படுகின்றன. இதனால் விபத்துகளும், பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும் அதிகரித்திருக்கின்றன.

* 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்துக்கு மொத்தம் 6.39 பணியாளர்கள் இருந்தனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 5.77 பேராக குறைந்து விட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டதை விட ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர்கள் குறைவாகவே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றால், அது நிச்சயமாக கவலை அளிக்கும் செய்தி தான். அதனால், கிராமப்புற ஏழை மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் 90% மக்கள் தங்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசுப் பேருந்துகளைத் தான் நம்பியிருக்கின்றனர். அவர்களுக்கு சேவை செய்வதற்காக அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நலிவடைந்து வரும் போக்குவரத்துக் கழகங்களுக்கு புத்துயிருட்டுவதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்