மோக்கா புயல் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மோக்கா புயல் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்,
தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது நேற்று முன்தினம் காலை மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியதையடுத்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில தினங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.