பணம் இல்லாதவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு மதுவிற்றவர் கைது
சிவகாசியில் பணம் இ்ல்லாதவர்களிடம் செல்போன்களை வாங்கி கொண்டு மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் பணம் இ்ல்லாதவர்களிடம் செல்போன்களை வாங்கி கொண்டு மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ஆய்வு
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சில இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் 24 மணி நேரமும் வினியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையில் போலீசார் அம்மன் கோவில்பட்டி, புதுதெரு, பாரதிநகர் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (வயது28) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மதுபாட்டில்களை வாங்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களையும், ரூ.1000-த்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் பாரதிநகர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்களை வினியோகம் செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் சோதனை நடத்திய போது 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது. இதுகுறித்து போலீசார் பிரவீன்குமாரிடம் கேட்டபோது மதுபாட்டில் வாங்க போதிய பணம் இல்லாதவர்கள் தங்களது செல்போன்களை கொடுத்து விட்டு மது வாங்கி சென்றது தெரியவந்தது.
ரசாயன பொருட்கள்
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் கூறியதாவது:- சிவகாசி பகுதியில் அதிகாலை நேரத்திலேயே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் அதில் அதிக போதைக்காக ரசாயன பொருட்களை கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ரசாயன பொருட்கள் கலந்து மது குடித்தால் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றார்.