சாராயம் விற்பனை அமோகம்

கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-06-05 17:40 GMT

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த மலையில் உள்ள ஓடைகளில் வரும் மழைநீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி, அதனை கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளி்ட்ட பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள சில கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதற்கு பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும் அவலமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏலம் எடுப்பவர்கள் கிராமப் புறங்களில் காய்கறிகளை விற்பனை செய்வது போல் சாராயத்தை வீதிவீதியாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதை தடு்க்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சாராயம் விற்பனையை தடுக்கமுடியவில்லை. அந்தவகையில் கச்சிராயப்பாளையம் அருகே மண்மலை கிராமத்தில் சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ½ லிட்டர் சாராய பாக்கெட் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரோந்து பணி

மேலும் 5 சாராய பாக்கெட் வாங்கினால் ஒரு பாக்கெட் சாராயம் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற வீடியோ அவ்வபோது வரும்போது சில நாட்கள் மட்டும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

அதன்பின்னர் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதை தவிர்க்க கல்வராயன்மலையில் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்