தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-06-12 18:38 GMT

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 323 பேர் மனுக்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுவிலக்கு

தமிழக அரசே மதுவிற்பனை செய்வதால் பல்வேறு வகையான குற்றங்களுக்கு உடைந்தையாக அமைந்து விடுகிறது. சமூக சீரழிவுக்கும், பல்வேறு வகையான குற்றங்களுக்கும் மது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பல குடும்பங்கள் அழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் சாலை விபத்துகளுக்கும் மதுவே காரணமாக அமைந்துள்ளது.

எனவே தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

ஆம்பூர் சோலூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அளித்துள்ள மனுவில் குடும்ப சூழ்நிலை கருதி ஆந்திர மாநிலத்தில் இறால் மீன்கள் வளர்ப்பு பண்ணையில் காவல் பணிக்கு செல்வதற்காக துப்பாக்கி உரிமம் வழங்க விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடும்ப சூழ்நிலை கருதி எங்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில் 5 பேருக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்