அழகர்கோவில் சித்திரை திருவிழா: ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை-வெளிநாட்டு டாலர்களும் இருந்தன

அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கையாக இருந்தது

Update: 2023-05-16 20:52 GMT

அழகர்கோவில்,


மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. இதில் கடந்த 3-ந் தேதி மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடாகி சென்றார். தொடர்ந்து 5-ந் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் பல்வேறு நிகழ்வுகளை முடித்து கொண்டு 480 மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவிட்டு கள்ளழகர் 9-ந் தேதி காலையில் அழகர் மலைக்கு திரும்பினார்.

10-ந் தேதி உற்சவ சாந்திக்கு பிறகு இருப்பிடம் சேர்ந்தார். சித்திரை திருவிழாவின் போது அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை சுவாமியுடன் 39 உண்டியல்கள், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக அனுப்பி வைக்கப்பட்டு திரும்ப கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

நேற்று காலை முதல் மாலை வரை அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திருவிழா உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 952-ம், தங்கம் 15 கிராம், வெள்ளி 63 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும், இருந்தன. உண்டியல் எண்ணும் பணியின் போது கள்ளழகர் கோவில் துணைஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் கருணாகரன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, ஆய்வாளர் கர்ணன், பேஷ்கார் முருகன், கோவில் பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்