அக்னிபத் திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்

Update: 2022-09-20 16:25 GMT


அவினாசி அருகே நடந்து வரும் அக்னிபத் திட்டத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான புதிய அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு முகாம் மண்டலம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மண்டல அளவில் அவினாசி அருகே பழங்கரை டி பப்ளிக் தனியார் பள்ளியில் ஆள் சேர்ப்பு முகாம் நேற்று முன் தினம் நள்ளிரவில் தொடங்கியது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

நள்ளிரவு தொடங்கியது

நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை இம்முகாம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 3,000 பேர் கலந்துகொண்டனர். இந்த முகாம் வருகிற அக்டோபர் 1-ந்்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவே பள்ளி முன்பு குவிந்தனர்.

வீரர்களை தேர்வு செய்ய 100 ராணுவ வீரர்கள் மற்றும் கர்னல், பிரிகேடியர், மேஜர், சுபேதார், மேஜர் அந்தஸ்திலான ராணுவ அதிகாரிகள் இருந்தனர். முகாமில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வுக்கு வருபவர்கள் அமர பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் உத்தரவின் பேரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ராணுவ கட்டுப்பாட்டிற்குள்

தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 400 மீட்டர் நீளம் கொண்ட ஓடு தளத்தில் 4 முறை சுற்றி மொத்தம் 1,600 மீட்டர் தூரம் ஓட வேண்டும். பின்னர் பெயர் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. முகாம் நடைபெறும் பள்ளி வளாகம் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மின் விளக்குகள் அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று (புதன்கிழமை)நடைபெறும் முகாமில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்