மின்சாரம் பாய்ந்து அக்காள், தம்பிகள் காயம்

Update: 2022-06-27 19:48 GMT

திருச்சி தாராநல்லூர் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 45). இவர் திருச்சி காந்திமார்க்கெட்டில் கூலிவேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டின் அருகே உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, திருவிழாவுக்கு வரும் பக்தர்களை வரவேற்க பொதுமக்கள் சார்பில் இரும்பு கம்பியில் விளம்பர பதாகை அமைக்கப்பட்டு இருந்தது. திருவிழா முடிந்ததும், இரும்பு கம்பியை தியாகராஜன் வீட்டில் வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று இரும்பு கம்பியை அதன் உரிமையாளர் கேட்டார். இதனையடுத்து தியாகராஜனின் மகள் தேவதர்சினி (20), மகன்கள் முகிலன் (17), பொழிலன் (14) ஆகிய 3 பேரும் மாடியில் இருந்த இரும்பு கம்பியை தூக்கி கீழே இறக்க முயன்றனர். அப்போது மாடியின் அருகில் சென்ற மின்சார கம்பியில் இரும்பு கம்பி உரசவே, 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்