தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு..! பயணிகள் கடும் அதிர்ச்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;
சென்னை,
தீபாவளிப்பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், பேருந்து, ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும், விமானங்களில் சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டுச்செல்வதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதையொட்டி, விமான கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னை- டெல்லி இடையே விமான கட்டணம் 6,500 ல் இருந்து 15,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சென்னை- கொல்கத்தா இடையிலான விமான கட்டணம் 7,500 ல் இருந்து 22,000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை- பெங்களூரு விமான கட்டணம் 3,500 ல் இருந்து 6,000 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல சென்னை- கொச்சி மற்றும் சென்னை- திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், விமான கட்டணம் பன்மடங்கு அதிகரித்தாலும். பயணிகள் தங்களது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் ஆர்வத்தில் கட்டணம் பற்றி யோசிக்காமல் விமானங்களில் பயணிக்கின்றனர்.