கோவை - கொழும்பு இடையே விரைவில் விமான போக்குவரத்து

கோவை - கொழும்பு இடையே விரைவில் விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

Update: 2023-06-18 22:30 GMT

கோவை - கொழும்பு இடையே விரைவில் விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

விமான போக்குவரத்து

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2020-ம் ஆண்டு வரை கோவை- கொழும்பு இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

அந்த சேவை கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விமான சேவையை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-இலங்கை இடையே 2003 முதல் 2008-ம் ஆண்டு வரை விமான சேவை நடைபெற்றது. அது நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இலங்கை நாட்டின் கொழும்பு நகருக்கு கோவையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை கடந்த 2017-ல் தொடங்கியது.

அது முதலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது. பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை அளிக்கப்பட்டது.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2.35 மணியளவில் கோவையில் தரையிறங்கும். மீண்டும் 3.35 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால்கொரோனா பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அந்த சேவையை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓடு தள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே இலங்கை நாட்டுக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ள விமான சேவைக்கு ஸ்லாட் என்று சொல்லக்கூடிய நேரம், ஓடுபாதை, விமானம் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவு செய்த பின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்