அடுத்த மாதம் 16-ந் தேதி முதல் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம்

அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்குகிறது என்று விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறினார்.

Update: 2023-09-22 20:29 GMT

சேலம் விமான நிலையம்

சேலம் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் போதுமான பயணிகள் வராததால், விமான சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், இந்த விமானசேவையை தொடங்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனிடையே மீண்டும் விமான சேவை தொடங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்குகிறது.

இது குறித்து சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:-

ஏர் அலையன்ஸ்

சேலத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் அலையன்ஸ் நிறுவனம் மூலம், விமான சேவை தொடங்குகிறது. அதன்படி 16-ந் தேதி மதியம் 12.40 மணிக்கு விமானம் பெங்களூருவில் புறப்பட்டு, 1.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு கொச்சி செல்கிறது.

தொடர்ந்து மதியம் 3.40 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் மாலை 5.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு பெங்களூரு சென்று அடைகிறது. இந்த விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் இயக்கப்படுகிறது. அனைத்து விமானத்திலும் 72 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் சேலத்தில் இருந்து சென்னைக்கு, இன்டிகோ விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்