டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அதிமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு
புதுடெல்லி,
அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த பிறகு தமிழக பாஜகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு அதிமுகவும் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றார் போல், பாஜகவினரை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது. அதேபோல், பாஜக தலைமையும் அதிமுக பற்றி பேசவேண்டாம் என நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது இருதரப்பும் தங்கள் தொண்டர்களை அமைதிகாக்குமாறு கூறியிருப்பதின் மூலம் நீடித்து வந்த மோதல் போக்கு தற்காலிகமாக முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றனர். கொச்சி வழியாக டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்து வருவது குறித்து புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.