சிதம்பரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவர்கள் வேண்டுமென்றே வஞ்சிக்கப்படுகிறார்கள் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு
தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இனத்தவர்கள் வேண்டுமென்றே வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.;
சிதம்பரம்,
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த தி.மு.க. அரசை கண்டிப்பது, உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அருள், சிவசுப்பிரமணியம், அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
பாலைவனமாக மாறிவிடும்
அப்போது முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:-
மேட்டூரில் இருக்கும் நீரை வைத்து எதுவும் செய்ய முடியாது. இப்போதே குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை இருக்கிறது. அதனால் விடியா தி.மு.க. அரசு தமிழகத்திற்கு அதன் உரிமையை மீட்டெடுக்க காவிரி தண்ணீரை உடனடியாக கேட்டு பெற்று தர வேண்டும். இல்லையென்றால் இப்பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் நீர்நிலை ஆதாரம் என்பது படுபாதாளத்திற்கு சென்று விட்டது.
தமிழகம் புத்தொளி பெறும்
தமிழகத்தில் இந்த விடியா அரசின் ஆட்சியில் பட்டியல் இனத்தவர்கள் வேண்டுமென்றே வஞ்சிக்கப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவர் 2 ஆண்டுகளாகியும் பதவியேற்க முடியவில்லை. சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் தமிழகத்தில் எல்லாமே எல்லை மீறி போய்விட்டது. இப்படி முரண்பாடுகளின் ஒட்டுமொத்த வடிவமாகவே இந்த விடியா தி.மு.க. அரசு இருந்து வருகிறது. விரைவில் மாற்றங்கள் நிகழும், எங்கள் அண்ணன் எடப்பாடியார், தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சராக வர உள்ளார். அவரால் இந்த தமிழகம் புத்தொளி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.