அதிமுக அலுவலக ஆவணங்கள் சி.வி.சண்முகத்திடம் ஓப்படைப்பு

அதிமுக அலுவலக மோதலின் போது எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-05-22 09:13 GMT

சென்னை,

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு நடைப்பெற்ற நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் எடுத்து சென்றனர். அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இந்த கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சி.வி. சண்முகத்தின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் அதிமுக அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ் தரப்பினர் எடுத்துச் சென்ற ஆவணங்கள் இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பெற்றுக்கொண்டார். அதிமுக அலுவலக மோதலின் போது எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள் ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்