அதிமுக- பாஜகவினர் திருக்கோவிலூர் போலீசில் புகார் மனு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
அதிமுக- பாஜகவினர் திருக்கோவிலூர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனா்.
திருக்கோவிலூர்,
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்ததையடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் சுப்பு தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும், பா.ஜ.க.வினர் குறித்தும் மிரட்டும் வகையில் அ.தி.மு.க. நகர செயலாளர் சுப்பு பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கலிவரதன் தலைமையில், மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளரும், திருக்கோவிலூர் தொழிலதிபருமான ஆர்.கார்த்திகேயன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் வக்கீல் என்.ஆர்.கே என்கிற என்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. நகர செயலாளர் சுப்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வரும், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன் மகன் திருமால் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகர செயலாளர் சுப்பு மற்றும் அ.தி.மு.க.வினர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தனர். இதையடுத்து இந்த 2 மனுக்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.