ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரம்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.;
ஆயுதபூஜை
ஆயுதபூஜையை முன்னிட்டு, கரூரில் விற்பனைக்காக பூசணிக்காய்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆயுதபூஜையின் போது கடைகள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட அனைத்து வகை தொழில் சார்ந்த பகுதிகளிலும் தொழில் சாதனங்களை வைத்து வழிபாடு நடத்தி பூஜை செய்வது வழக்கம். இவ்வாறு பூஜை செய்து விட்டு தொழில் நிறுவனங்களுக்கு முன் திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பூஜையை நிறைவு செய்வார்கள்.
ரூ.20-க்கு விற்பனை
அந்த வகையில் ஆயுதபூஜையில் முக்கிய பங்கு வகிப்பது பூசணிக்காய்தான். இதனால் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் பூசணிக்காய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.இந்த பூசணிக்காய், பாளையம், வெள்ளியணை, மோகனூர் பகுதிகளிலிருந்து அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு பூசணிக்காய் 2 கிலோ முதல் 5 கிலோவுக்கும் அதிக எடையுள்ள அளவுகளில் வந்துள்ளன. 1 கிலோ பூசணிக்காயின் விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள்
நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பூக்களை பயிர் செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கும், ஏல மார்க்கெட்டிக்கும் கொண்டு சென்று விற்கின்றனர். தற்போது ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை யொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்றது தற்போது ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.80-க்கு விற்றது ரூ.250-க்கும், அரளி ரூ.80-க்கு விற்றது ரூ.520-க்கும், ரோஜா ரூ.150-க்கு விற்றது ரூ.460-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கு விற்றது ரூ.ஆயிரத்திற்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கு விற்றது ரூ.520-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கு விற்றது ரூ.ஆயிரத்திற்கும் விற்பனையானது.
வாழைத்தார்
இதேபோல் ஆயுதபூஜை யையொட்டி நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைத்தார் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கு விற்றது தற்போது ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.350-க்கு விற்றது ரூ.475-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கு விற்றது ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கு விற்றது ரூ.450-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கு விற்றது ரூ.5-க்கும் விற்பனையானது.