வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு

வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

Update: 2023-01-20 11:58 GMT

வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

கண்காட்சி

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தொரப்பாடியில் உள்ள அரசு எந்திர கலப்பை பணிமனையில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவற்கான கண்காட்சி நேற்று நடந்தது. இதில் பாரம்பரிய நெல்ரகங்கள், வேளாண் சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயிர்கள் மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் நம்முடைய பகுதியில் எந்த வகையான முறைகளை கையாண்டு வேளாண் செய்து வருகிறமோ அந்த முறைகளுக்கு தேவையான கருவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரிய ரக பயிர்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெப்பம் போன்ற பல்வேறு பிரிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை பொறுத்தவரை வெப்பமண்டலத்தில் அமைந்திருக்கக்கூடிய பகுதி.

அடுத்த தலைமுறைக்கு...

இந்த பகுதியில் கோடைகாலத்தில் உச்சபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் இருக்கும். குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 14 டிகிரி செல்சியஸ் இருக்கும். தற்போது நாம் குளிர்காலத்தின் மையப்பகுதியில் உள்ளோம். இந்த பனிக்காலத்தில் நோய் தாக்குதல் என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறுதானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம். வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில். இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் வேளாண்மை எந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் வழங்கிட முதல் தவணையாக வேலூர் மாவட்டத்துக்கு 41 எந்திரங்கள் ரூ.52 லட்சத்து 65 ஆயிரம், கிராம அளவிலான வாடகை மையம் 2 இடங்களில் அமைக்க ரூ.16 லட்சம் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். அப்போது டிராக்டரை கலெக்டர் ஓட்டிப்பார்த்தார்.

நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் விஸ்வநாதன், துணை இயக்குனர் (மத்திய மற்றும் மாநில அரசு திட்டம்) ஸ்டீபன் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

=============


Tags:    

மேலும் செய்திகள்