பூட்டி கிடக்கும் வேளாண் விரிவாக்க மையம்
நெகமத்தில் வேளாண் விரிவாக்க மையம் பூட்டி கிடக்கிறது. இந்த மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம்
நெகமத்தில் வேளாண் விரிவாக்க மையம் பூட்டி கிடக்கிறது. இந்த மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வேளாண் விரிவாக்க மையம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் வேளாண்மை அலுவலகம், உரக்கிடங்கு, சேமிப்பு கிடங்கு பொள்ளாச்சியில் உள்ளன. இதனால் நெகமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இடுபொருட்கள், உரங்கள், தொழில்நுட்ப உதவிகளை பெற 15 கி.மீ. தூரம் உள்ள பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு நெகமம் வாரச்சந்தை அருகில் என்.சந்திராபுரம் ரோட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது.
இதனால் நெகமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மையத்துக்கு சென்று, வேளாண் திட்டங்களில் பயன்பெற்று வந்தனர். மேலும் மானிய விலையில் வேளாண் கருவிகள், இடுபொருட்கள் உரங்களை பெற ஆலோசனை பெற்றனர். ஆனால், சில ஆண்டுகளிலேயே வேளாண்மை விரிவாக்க மையம் மூடப்பட்டது.
திறக்க வேண்டும்
நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வாரம் ஒரு நாள் மட்டும் பணியாளர் வந்து செல்கிறார். தினமும் அலுவலக பணியாளர்கள், அதிகாரி வந்து செல்ல வேண்டும். மையம் மூடி கிடப்பதால், பொள்ளாச்சியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று வருகிறோம். இதனால் காலவிரயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வேளாண் விரிவாக்க மையத்தை திறக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, நெகமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கழிப்பறை, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதோடு, புதர்களை அகற்றி மீண்டும் திறக்கப்படும் என்றனர்.