வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்-ஏமாற்றமும்

தமிழக வேளாண்மை பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பட்ஜெட்டை வரவேற்றும், ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.

Update: 2023-03-21 19:44 GMT

வேளாண்மை பட்ஜெட்

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து புதுக்கோட்டை விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

வரவேற்பு

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி:- வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்துள்ளது. சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ரேஷன் கடையில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய தொகுப்பு மாவட்டங்களில் புதுக்கோட்டையை சேர்த்தது வரவேற்கக்கூடியது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம். பலாப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்டுள்ள பொருட்கள் தயாரிக்க ஊக்குவிப்பதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இயற்கை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வாங்க ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்பது வரவேற்க கூடியது.

மழையில் நனையும் நெல்மணிகள்

அரிமளம் ஒன்றியம் பெருங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவரிமுத்து:- வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள விவசாயிகள் வெளி நாட்டிற்கு அழைத்து செல்வதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் அழிந்து வரும் பனை மரத்தை காப்பாற்றும் பொருட்டு விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். தக்காளி, வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாகிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயறு பெருக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மழை காலங்களில் விளைந்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது. இவற்றை பாதுகாத்திட ஒன்றியத்திற்கு ஒரு இடத்தில் மிகப்பெரிய அளவில் குடோன்கள் அமைத்திருக்கலாம். நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் நெல்மணிகள் திறந்தவெளியில் பாதுகாப்பற்று மழையில் நனைந்தபடி கிடக்கிறது அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனியாக எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது சற்று வருத்தம் அளிக்கிறது. ஆலங்குடி, வடகாடு, |கொத்தமங்கலம், கீரமங்கலம் போன்ற பகுதிகளில் அதிகளவு வாழை, பலாப்பழம், எலுமிச்சை மற்றும் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த விளைபொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்கு இல்லாததால் அவைகள் வீணாகிறது. இப்பகுதியில் குளிர் பதன கிடங்கு அரசு சார்பில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தால் நன்றாக இருக்கும்.

ஏமாற்றம் அளிக்கிறது

அனவயல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, பலா, வாழை, எலுமிச்சை, மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றுக்கான மதிப்பு கூட்டும் முறை தான் இல்லை. இதேபோல் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு, தேங்காய், கொப்பரை கொள்முதல் நிலையம், மேற்கூரையுடன் கூடிய நெல் கொள்முதல் நிலையம் போன்ற விவசாயிகள் மேம்பாட்டிற்கான எந்தவொரு விவசாய நலத்திட்டங்களும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்