ஓடும் லாரியில் ரூ.30 லட்சம் விவசாய இடுபொருட்கள் கொள்ளை
விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு சென்றபோது ஓடும் லாரியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள விவசாய இடுபொருட்களை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவசாய இடுபொருட்கள் நிறுவனம்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை எம்.கே. நகர் பகுதியில் விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து கடந்த 19.4.2023 அன்று சிவமணி என்பவருக்கு சொந்தமான ஒரு டாரஸ் லாரியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள விவசாய இடுபொருட்கள் அடங்கிய 1,059 பெட்டிகளை ஏற்றி, கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த டாரஸ் லாரியை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த லாரியில் சுரேந்திரனுக்கு உதவியாக கிளீனர் ஒருவரும் சென்றார். இவர்கள் மறுநாள் காலை கோயம்புத்தூரில் உள்ள அந்நிறுவனத்திற்கு சென்றடைந்தனர்.
53 பெட்டிகள் மாயம்
பின்னர் அங்கிருந்த ஊழியர்கள், விவசாய இடுபொருட்களை சரிபார்த்தனர். அதில் 1,006 பெட்டிகள் மட்டுமே இருந்துள்ளது. 53 பெட்டிகள் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மாயமான பெட்டிகளில் உள்ள விவசாய இடுபொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இது குறித்து விழுப்புரம் நிறுவன குடோன் பொறுப்பாளர் ஷெரீன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டனர்.
ஓடும் லாரியில் கொள்ளை
இதில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இருந்து சேலம் தலைவாசல் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்திரன் ஓட்டிச்சென்ற டாரஸ் லாரியை முந்திச்செல்வது போன்று 2 மினி லாரிகளில் வந்தவர்களில் ஒருவர், சுரேந்திரனின் லாரியில் ஏறி அதிலிருந்தவாறு அங்கிருந்த விவசாய இடுபொருட்கள் அடங்கிய பெட்டிகளை மற்ற 2 மினி லாரிகளில் தூக்கிப்போட்டுள்ளார். அதனை அந்த 2 மினி லாரிகளில் வந்தவர்கள் தவறி கீழே விழாமல் பெட்டிகளை பிடித்து வைத்துள்ளனர். இவ்வாறாக 53 பெட்டிகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
3 பேர் சிக்கினர்
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் கோடீஸ்வரன் (வயது 49), புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த முகமது சித்திக் மகன் ரியாஸ் (45), கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்பாபு மகன் கோவிந்தராஜ் (24) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிந்தது. இவர்களை நேற்று பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-
லாரிகளில் பின்தொடர்ந்தனர்
பிடிபட்ட கோடீஸ்வரன், ரியாஸ், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் மற்றும் இவர்களுடன் கோயம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ் என்பவரும் சேர்ந்து, கடந்த 19.4.2023 அன்று விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு டாரஸ் லாரியில் விவசாய இடுபொருட்களை கொண்டு செல்ல இருந்ததை அறிந்து அந்த லாரியை விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து 2 மினி லாரிகளில் பின்தொடர்ந்து சென்றனர்.
உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகில் டாரஸ் லாரியை நிறுத்தி அதன் டிரைவரும், கிளீனரும் சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் கோவிந்தராஜ், அந்த லாரியில் ஏறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த லாரி புறப்பட்டதும் அதனை மற்ற 3 பேரும் 2 மினி லாரிகளில் பின்தொடர்ந்துள்ளனர்.
ரூ.16 லட்சத்துக்கு விற்பனை
சிறிது தூரம் சென்றதும் அந்த லாரியில் போடப்பட்டிருந்த தார்பாயை கிழித்து அதிலிருந்து விவசாய இடுபொருட்கள் அடங்கிய பெட்டியை கோவிந்தராஜ் எடுத்து முந்திச்செல்வதுபோன்று வலதுபுறமும், இடதுபுறமுமாக வந்த மற்ற 2 மினி லாரிகளில் தூக்கிப்போட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் இருள்சூழ்ந்த பகுதியில் லாரி செல்லும்போது பெட்டிகளை மினி லாரிகளில் தூக்கிப்போட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் 53 பெட்டிகளை கொள்ளையடித்து, கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அந்த டாரஸ் லாரி தலைவாசல் அருகே செல்லும்போது சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவரும், கிளீனரும் டீ குடிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் அந்த லாரியில் இருந்து கோவிந்தராஜ் இறங்கியுள்ளார்.
பின்னர் கோடீஸ்வரன், ரியாஸ், கோவிந்தராஜ், பொன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்த விவசாய இடுபொருட்கள் அடங்கிய 24 பெட்டிகளை மட்டும் பெங்களூருக்கு கொண்டு சென்று ரூ.16 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள பெட்டிகளை திருச்சி உள்ளிட்ட பிற இடங்களில் கொண்டு சென்று விற்பதற்காக செல்லும்போது விழுப்புரம் போலீசாரின் வாகன சோதனையில் பொன்ராஜ் தவிர மற்ற 3 பேரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம், மினி லாரிகள் பறிமுதல்
இதையடுத்து கோடீஸ்வரன், ரியாஸ், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.16 லட்சம் ரொக்கப்பணத்தையும் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள விவசாய இடுபொருட்கள் அடங்கிய 29 பெட்டிகளை மீட்டதுடன், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பொன்ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் இருக்கும் பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பலை பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் வெகுவாக பாராட்டினார்.